கும்பகோணம் அருகே ஆற்றில் வேன் கவிழ்ந்து டிரைவர் பலி: 21 பேர் படுகாயம்திருவிடைமருதூர், ஜூலை. 14-
கும்பகோணம் அருகே உள்ள சோழந்த நத்தத்தை சேர்ந்த 21 பேர் ஒரு வேனில் அரியலூர் மாவட்டம் விளுப்பங் குறிச்சியில் நடைபெற்ற சீர்வரிசை விழாவிற்கு சென்றனர்.பின்னர் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
நள்ளிரவு 2 மணியளவில் திருவைக்காவூர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் மகேந்திரப்பள்ளி சாலையில் வந்து கொண்டிருந்தனர். வேனை டிரைவர் முகம்மது சர்புதீன் ஓட்டி வந்தார். திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கொள்ளிடம் ஆற்றில் 3 முறை தலைக் குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிரைவர் முகம்மது சர்புதீன் சம்பவ இடத்திலே பலியானார். வேனில் இருந்த 21 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 9 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கபிஸ்தலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.