ஹஜ் யாத்ரிகர்களுக்கு வசதியாக மக்காவில் மெட்ரோ ரெயில்!



மக்கா: முஸ்லிம்களுக்கான ஹஜ் புனிதக்கடமையின் போது யாத்ரீகர் போக்குவரத்துக்கு உதவும் வகையில் மினா, அரஃபா, முஜ்தலிஃபா ஆகிய புனித இடங்களுடன் மக்காவை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் முழுமை பெற்றுள்ளது. 30 தினங்களுக்கு இந்த ரயில்களின் வெள்ளோட்டம் விரைவில் விடப்படவுள்ளன. ஹஜ் யாத்ரிகர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது




முன்னதாக, சவுதி அரேபிய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் இளவரசர் மன்சூர் பின் மித்அபு இதனை ஆய்வு செய்ய உள்ளார்.அமைச்சக வட்டாரங்கள் இதுபற்றி கூறுகையில் "6.5 பில்லியன் சவூதி ரியால்கள் செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மக்கா மெட்ரோ திட்டம், யாத்ரிகர்களுக்கான திட்டங்களிலேயே இரண்டாவது பெரிய திட்டமாகும். இதன்மூலம் ஒரு மணி நேரத்திற்கு 72,000 யாத்ரிகர்கள் பயணித்துப் பயனடையலாம். புனிதக்கிரியைத் தலங்களான மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகியவற்றில் தலா மூன்று நிலையங்கள் என்கிற கணக்கில் 9 நிலையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.




முதற்கட்டமாக, சுமார் 300 மீட்டர் நீளமுள்ள 10 தொடர்வண்டிகள் இயக்கப்படும் என்று சவுதி அரேபிய நகர்ப்புற வளர்ச்சி துறை துணை அமைச்சர் ஹபீப் ஜெயினுல் ஆபிதின் தெரிவித்துள்ளார்." ஒவ்வொரு வண்டியும் 3000 பயணிகளுக்கு இடமளிக்கும்"என்றார் அவர். இந்த ரயில் திட்டமானது அரஃபா - முஸ்தலிஃபா மற்றும் முஸ்தலிஃபா - மினா இடையேயான பயண கால அளவையும், மக்கா நகரின் போக்குவரத்து நெரிசலையும் வெகுவாக குறைத்துவிடும்.


மேலும் அவர் தெரிவிக்கையில் "இரண்டாம் கட்டத்தில், தொடர்வண்டிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படும்.மக்கா புனித ஆலயத்திற்கான நிலையம் உம்முல்குரா சாலையில் அமைக்கப்படும். இந்த அல்மஷாயிர் ரெயில்வேயானது படிப்படியாக மதீனா, ஜெத்தா நகரங்களையும் இணைத்துச் செயற்படும் வகையில் அல்-ஹரமைன் ரெயில்வேயுடன் இணைக்கப்படும்" வருடம் முழுதும் இந்த ரெயில்கள் இயக்கப்படும்.80-120 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரெயில்களில் 20விழுக்காடு அமர்ந்து பயணிக்கவும், 80 விழுக்காட்டினர் நின்று பயணிக்கவுமாக அமைக்கப்பட்டுள்ளனவாம். வரும் வியாழனன்று இதற்கான வெள்ளோட்டம் தொடங்கப்படுகிறது.