பக்கத்து வீட்டுகாரர்களிடம் பேண வேண்டிய பண்புகள்

ஓர் இறை நம்பிக்கையாளர் தனது அண்டை வீட்டாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், அண்டை வீட்டாருக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் என்ன என்பதையும் பார்ப்போம்.

தொல்லை தருதல்

வீட்டில் ரேடியோ, டேப் ரிக்கார்டர், டி.வி. போன்றவற்றை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டை வீட்டாருக்குக் கடும் சப்தத்தை ஏற்படுத்தித் தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர் உறக்கத்தைக் கெடுப்பது என்று எந்த வகையிலும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக்கூடாது.“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர், தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தர வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரீ 5187

அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்க மாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்குகிறது.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எவனுடைய நாச வேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்” என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி)நூல்: புகாரீ 6016


அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன் என்று மூன்று தடவை நபிகளார் கூறியது, அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்குகிறது. அண்டை வீட்டாருடன் தொடர்ந்து பகைமைப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த ஹதீஸை ஆழமாகச் சிந்திக்கட்டும். அண்டை வீட்டாருக்குத் தொல்லைகள் தருபவன் சுவர்க்கம் புக முடியாது என்ற கடுமையான எச்சரிக்கையையும் நபிகளார் செய்துள்ளார்கள்.
“எவனுடைய நாச வேலைகளில் இருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சுவர்க்கம் செல்ல முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 73நல்லறங்கள் பல புரிந்தும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தந்தால் அவரும் நரகம் புகுவார் என்பதை விளக்கும் இன்னொரு நபிமொழி.ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாகக் கருதப்படுகிறாள்; ஆனால் அவள் அண்டை வீட்டாருக்குத் தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவள் நரகில் இருப்பாள்’ என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத் தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள்’ என்றார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: அஹ்மத் 9298

“ஒரு அடியானின் உள்ளம் சரியாகும் வரை அவனுடைய ஈமான் சரியாகாது. அவனுடைய நாவு சீராகும் வரை அவனுடைய உள்ளம் சரியாகாது. யாருடைய அண்டை வீட்டார் அவனின் நாச வேலையிலிருந்து பாதுகாப்பு பெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது” என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல்: அஹ்மத் 12575

அண்டை வீட்டாருக்கு நலம் நாடாமல் தான் மட்டும் நன்றாக இருந்தவனுக்கு எதிராக அவனது அண்டை வீட்டான் அல்லாஹ்விடம் முறையிட்டு நீதி கேட்பான்.
தன் அண்டை வீட்டாருடன் தொடர்புள்ள எத்தனையோ பேர், அல்லாஹ்விடம், “என் இறைவா! இவன் என்னை (வீட்டுக்குள்) விடாமல் கதவை தாளிட்டுக் கொண்டான்; நல்லதை (எனக்கு தராமல்) தடுத்தான்” என்று மறுமை நாளில் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்: அதபுல் முஃப்ரத் 111


(நன்றி...M.முஹம்மது யூனுஸ்..குவைத்)